புறநானூறு : 107 

- பாரி பாரி என்று பல ஏத்தி - 



"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"


பாடற் குறிப்பு :
பாடியவர் : கபிலர்.
திணை : பாடாண்
துறை : இயன் மொழி
பாடப்பட்டோன் : பறம்பு நாட்டு மன்னன் வள்ளல் வேள் பாரி.

பொருளுரை:

செம்மையான நாக்கை உடைய புலவர்கள் எல்லாம் அவனுடைய புகழை வாழ்த்தி அவன் ஒருவனையே ‘பாரி பாரி’ என்று புகழ்கின்றனர். இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, மழையும் உண்டு இந்த உலகைக் காப்பதற்கு.


சொற்பொருள்:

பாரி பாரி - பாரி பாரி, என்று பல ஏத்தி - என்று பல செயல்களை வாழ்த்தி, ஒருவர்ப் புகழ்வர் - ஒருவனையே புகழ்கின்றனர், செந்நா புலவர் - செம்மையான நாக்கை உடைய புலவர்கள், பாரி - வேள் பாரி, ஒருவனும் அல்லன் - ஒருவன் மட்டும் இல்லை, மாரியும் உண்டு - மழையும் உண்டு, ஈண்டு - இங்கே, உலகு - உலகம், புரப்பதுவே - பாதுகாப்பதற்கு

Post a Comment

0 Comments